Thursday, December 25, 2014

சாகாக்கல்வி - 3



இறைவன் ஒருவனே என்று சொன்ன வல்லவன் சன்மார்க்கத்தின் படி நான், நீ என்று சொல்லி துவைதத்தை நமக்கு அறிமுகபடுத்துகின்றார். இதோ அவர் அனுபவ வார்த்தைகள்


தியானம் செய்யவேண்டுமானால், எதாவது ஒர் உருவத்தைத் தியானிக்க வேண்டும். நிஷ்களமாய் யிருக்கபடாது. உருவமாக இருக்கவேண்டும். அருவமாக தியானிக்கபடாது. பின் உருவம் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில்:- பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் பார்க்கபடும் பொருளும் கெடுவது அதிதம். சத்தியம்.


தியானம் என்றவுடன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவது என்று பொருளல்ல. அவர் குறிப்பிடுகின்ற தவம் செய்தவம். (குறிப்பு செய்தவம் என்ற வார்த்தையை சுத்த ஞானிகள் மாத்திரமே குறிப்பார்கள். உதாரணமாக திருவள்ளுவர், திருமூலர், போன்றவர்கள்) அவர் அனுபவத்தின் கடைசி இரண்டு வரிகளில் எப்படி எனில்:- பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் பார்க்கபடும் பொருளும் கெடுவது அதிதம். சத்தியம்.


கண்களை மூடாமல் தவம் செய்வதே செய்தவம். இதை தாங்கள் கற்று கொண்டால். உங்கள் நான் என்ற அறிவின் அடுத்த புள்ளி தொடங்கபடும். இதோ அவரின் அனுபவம்.


சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஒர் சாதனம் சொல்லக்கேட்டு, அதன் படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும். அதைக்கண்டு பல்லித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலந்தாழ்த்தாது, எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்த குணம் வந்தவன் எவனோ அவன் தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆண்டவனுமாவான்.


செய்தவத்தின் வீரியத்தை எவ்வாறு நமக்கு எடுத்து காட்டுகின்றார். சாதரண மனிதன் கூட இறைவனை எந்த நிலையிலும், எந்த வயதிலும் அடைய எளிய வழியை தன் அனுபவ வாழ்க்கையை நமக்கு விட்டு சென்றிருக்கின்றார்.


ஆஹா! அற்புதம் இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தோமே என்று நினைத்து தோள் தட்டி கிளம்புனீங்கனா மீண்டும் ஒரு முறை வேதரிஷி வியாசரின் அனுபவ வார்த்தகளை நினைவு கூர்வோம்.  

இதோ… இந்த ஆத்மாவை, (அறிவை) “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.


அட போப்பா, என்று நீங்கள் சொல்வது புரிகின்றது. அப்ப, இதுக்கு வழிதான் என்ன என்று கேட்பதும் புரிகின்றது. இந்த தொகுப்பின் தலைப்புக்கு சென்று பார்த்தால் உங்களுக்கே புரியும்.


இதுவரை நாம் பார்த்து சன்மார்க்கத்தின் இயல்பை. சன்மார்க்கத்தை புரிந்த நாம் சன்மார்க்கியாக வேண்டாமா? அதுவும் சுத்த சன்மார்க்கியின் இயல்பு என்றால் என்ன? சுத்த சன்மார்க்கி என்பவன் யார்? இதோ வல்லவனின் அனுபவ குறிப்பு…


  • 1.சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும்.
  • 2. விருப்பு, வெறுப்பு முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும்,
  • 3. கொலை (கோபம்), புலை (பொய்) தவிர்த்தவர்களும்.

அதாவது செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.

  • சாகாதவனே சன்மார்க்கி. சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே யன்றி வேறில்லை.

சரிப்பா, ஏதேதோ சொல்லி சாகாத கல்வி என்று தலைப்புக்கு கூட்டிட்டு வந்துட்ட. சரி அப்படின்னா என்ன. அதை சொல்லு முதல்ல. இதோ…


இதற்கு, முதலில் நாம் மரணத்தை பற்றி தெரிந்து கொண்டால் தான் அதை வெல்லும் வழியை அறியமுடியும். இது வேறயா, என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி மரணம் என்றால் என்ன?. அதன் இயல்பு தான் என்ன?. இதோ வல்லவனின் அனுபவ வார்த்தைகள்…

  • கரணமெல்லாங் கலங்கவரு மரணமுஞ்சம் மதமோ
  • மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் = கரணம்.

வார்த்தைகளில் இதை படித்தால் ஒன்றும் விளங்காது. இதை உணர்ந்து பார்த்தால் தான் விளங்கும். அதற்காக இறந்துப்பார்த்தால் தான் தெரியும் என்று நினைக்ககூடாது. சற்றே சிந்தித்து பாருங்கள். உங்கள் நெருங்கிய உறவு ஒருவர் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் இருந்து அவர் சவம் அடக்கம் செய்யும் வரை நடக்கின்ற நிகழ்வுகளை சற்றே யாதொரு உணர்ச்சியும் இன்றி பார்த்தால் உங்களுகே சற்று தெளிவு பிறக்கும். இந்த தெளிவு நினைவிருக்கும் வரை உங்கள் அறிவின் ஒரு புள்ளி திறந்திருக்கும். மறக்கும் போது அறிவின் புள்ளி மூடப்படும். மூடினால் உலகியல் உங்களை கவர்ந்து கொள்ளும். இந்த தெளிவை உலகியலில் நீங்கள் செயல்படுத்தும் போது தான் உங்கள் அறிவின் புள்ளி வளர்ச்சியடையும். இதோ தெய்வ புலவன் திருவள்ளுவனின் அனுபவம்….


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


சரி இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுப்பா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வல்லவனின் அனுபவ குறிப்பு இதோ….


இந்த உலகத்தில் மனிதர்களுக்கு தேகம் சீக்கிரம் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவை,

  • ஆகாரம்     = உணவு                             =          9 பங்கு நஷ்டம்
  • மைதுனம்  = தாம்பத்திய உறவு     =          1 பங்கு நஷ்டம்

பிண்ட உற்பத்தி தொடங்கி இறந்து போகிறவரை ஆகாரம் உண்டு. இது இயற்கை.

  • சிசு, வாலிபம், விருத்தாப்பியம்    = மைதுனம் கிடையாது.
  • கெளமாரம், யெளவனம்       = மைதுனம் உண்டு. இந்த பருவங்களிலும்   - அனந்த வகையாலும் உண்டாகும் துன்பங்களாலும், மைதுனம் தடைபடும். இந்த காலங்களிலும் ஆகாரமுண்டு.

நம்மை நஷ்டமடைய செய்வன நான்கு. அவை..

  •  1. ஆகாரம்
  •  2. மைதுனம்
  •  3. நித்திரை
  •   4. பயம்.

இந்நான்கிலும் அதிஜாக்கிரதையாய் யிருக்கவேண்டும். இதனிலும் முக்கியமானது – ஆகாரம், மைதுனம். ஆதலால், இவ்விரண்டிலும் அதனினும் அதிக ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது – மைதுனம். ஆதலால் இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிடில், தேகம் அதிசீக்கிரத்தில் போய்விடும். பின்பு முக்தி அடைவது கூடாது. முக்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்க தாயும், வேறு தேகத்தா லடைவது அரிதாயும் இருப்பது – ஆதலால், எவ்விதத்தா லாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.


துர் மரணங்கள்:-

  • ஜீவர்களுக்கு துர் மரணங்கள் – வாந்தி, பேதி, மாரடைப்பு – ஆகாரக் குறைவாலும், மிகுதியாலும், அக்கிரம (விருப்பு), அதிக்கிரமத்தாலும் (வெறுப்பாலும்), பொருந்தலாலும் – இவை போன்ற பலவகை கெடுதியாலும் உண்டாகின்றன.

இந்த அனுபவக்குறிப்பில் இருந்து நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால், வல்லவன் தன் சமரசத்தை எங்கே முதலில் பயன்படுத்தினான் என்பதை முதலில் தனது உடலை எவ்வாறு உறுதி செய்துக்கொண்டான். அதன் பிறகே ஆன்மா என்ற நான் என்ற அறிவை தேட தொடங்கியிருக்கின்றான். மற்றொறு தெளிவிற்கு திருமூலரின் அனுபவத்தை பார்ப்போம்…


உடம்பார் அழியில் உயிரார் அழிவார்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (724)



உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (725).


இங்கே நாம் சற்று சிந்தித்து பார்த்தால் நமது அறிவின் புள்ளி சற்றே விரியத்தொடங்கும். எப்படி எனில்…


உடம்புயிர், உயிர், இறைவன் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. ஆதலால் அடித்தளம் உறுதியாக இருந்தால் தான் நாம் இறைநிலையை அடையமுடியும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் தான் வல்லவன் அடிக்கடி உடலை பொன் போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். சரி இதை சற்று புரியும்படியாக பார்ப்போம்.

  • இறப்பு என்பது என்ன என்று தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். உடம்பின் உயிர் (ஜீவான்மா = சிற்றறிவு) மட்டுமே இறக்கும். உயிர் (ஆன்மா = அறிவு) இறக்காது. இறைவன் (பேரான்மா = பேறறிவு) இதுவும் இறக்காது.

  •  சாகாகல்வி என்பது என்ன ஜீவான்மாவின் இறப்பை தவிர்ப்பதே அன்றி வேறில்லை.

சரி என்னப்பா நீ பாட்டுக்கும் ஜீவான்மான்ற, ஆன்மான்ற, பேரான்மான்ற இதெல்லாம் எங்கப்ப இருக்கு. எல்லாம் நமக்குள்ளே தான்.


ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், இவர்களின் வேதம் என்ன தெரியுமா? தன்னை (ஜீவான்மா) அறிந்தவனே ஞானி. இதை அறிந்தால் ஆன்மாவை அறியலாம். ஆன்மாவை அறிந்தால் பேரான்மாவை அறியலாம்.


இதுவரை நாம் பார்த்தது சாகாகல்வியை பற்றி தெரிந்துக் கொண்டிருக்கின்றோம். இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வது, அறிந்துகொள்வது என்ற வார்த்தையை அடிக்கடி படித்திருப்போம்.

  • தெரிந்துக்கொள்வது = just know
  • அறிந்துக்கொள்வது = by experience
இந்த அனுபவம் (experience) வந்தால் தான் மேற்கூறிய அனைத்தும் நமக்கு சாத்தியமாகும்.

கல்வி தொடரும்........

No comments:

Post a Comment