Friday, January 30, 2015

செய்தவம்



பாடம் 2

செய்தவம்

திருவருள் கிடைக்க வேண்டும் என்று நாம் திருமந்திரத்தை பிடித்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்றீர். திருமந்திரத்தை பிடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. இதோ நம் வல்லவன் கூறுவதை கேட்ப்போம்.


மேல்குறித்த அக்கரத்தை

1.  அக அனுபவிகள் (தவம் செய்பவர்கள்) :-   தத்துவங்களை அறிந்து அனுசந்தானஞ் செய்வார்கள்

       
2.  சாதகிகள் (யோகிகள்) :- நாவினாலுன்னிக் கரண மோய்ந்தால் தத்துவானுசந்தானஞ்      செய்யக் கூடும்.

     
3.  உலகிகள் (மனிதர்கள்):-   நாவினாலுன்னத் தங்கள் மனோரதம் சித்திக்கும்.

      

4.  வகரவித்தை யுடையவர்கள் (சித்தர்கள்) :- பவுதிகம், லோகம், ஒஷாதி, லவணம் முதலியவற்றை சேர்த்து வகரத்தை முடிப்பார்கள்.

5.  தகரவித்தை யுடையவர்கள்   (முனிவர்கள்) :-    அது போலவே அமைத்துக் கொண்டு, தேகத்தை நீடிக்கச் செய்வார்கள்.

     
6.  ஞானானுபவிக்கு (ஞானிகள்) :-             இதனது  உண்மையாவும் சுத்த சன்மார்க்க சகஜ சாத்திய ஞானானுபவிக்கு விளங்கும்.


ஏன் நமக்கு திருவருள் கிடைக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினால், வல்லவனின் அனுபவம் நமக்கு உண்மையை உரைக்கின்றது. இதோ அவர் அனுபவம்….


அருளறி வொன்றே யறிவுமற் றெலாம்

மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே


பார்த்தீர்களா அருளினால் அறியக்கூடியதே உண்மை என்றும் மற்றவற்றினால் அறிவது முடியாது என்று வரையறுக்கப் பட்டிருக்கின்றது என்றும், வகுத்திருப்பது யார் (சிவமே) என்று நமக்கு தெளிவாக உணர்த்துகின்றார். மேலும் ஒரு தெளிவிற்கு அவரின் மற்றொரு அனுபவத்தை பார்க்கலாம்…

  மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக 
   செயல் அனைத்தும் அருளொளியால் காண்க
   என எனக்கே திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

நூல்கள் அனைத்தும் வழி மட்டுமே காண்பிக்கும்.  நூல்களைப் படித்தால் அதன் வழியில் மட்டுமே செல்ல முடியும். செயல்கள் அனைத்தையும் அருள் ஓளியால் (அனுபவத்தில்) காண வேண்டும் என்று சொல்கின்றார். அனுபவ மார்க்கமே சன்மார்க்கம் என்று சொல்கின்றார்.

மேலும், கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற, ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபம் என்று உண்மையாக அறிய வேண்டும். கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக்கொண்டே அதை அடையக்கூடும் என்று அறிய வேண்டும்.

இதில் இருந்து நமக்கு உணர்த்தபடுவது திருவருளின் முக்கியத்தையும், அருளைக்கொண்டே அனைத்தையும் அடையமுடியும் என்ற நிலையையும். இதற்கு நாம் முதலில் பார்க்கப்போவது சத்விசாரம் என்ற செய்தவத்தை.

முதல் பாடத்தில் நாம் பார்த்தது சாகாக்கல்வியின் வழியை. பரோபகாரம், சத்விசாரம் இவை இரண்டு மட்டுமே சாகாக்கல்வியை அடைவதற்கு ஏது என்று அறிந்தோம். இந்த பாடத்தில் நாம் முதலில் பார்க்கப்போவது சத்விசாரம் என்ற செய்தவத்தை.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அவை

1.  பறவை வழி

2.  எறும்பின் வழி

அது என்ன என்பதைப்பற்றி பார்ப்போம்

1.  பறவையின் இயல்பு என்ன என்றால் தனக்கு ஆபத்து ஏற்படும் போது உடன் நிலத்தில் இருந்து ஆகாயத்தில் தன் நிலையை மாற்றிக்கொள்ளும். மேலும் தன் தேவைகளுக்கு அது ஆகாயமார்க்கத்தையே நாடிச்செல்லும். அது அதற்கு இயற்கையிலே கொடுக்கப்பட்டது. இதனால் தான் பறவைகள் தங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துக்கொள்ள முடிகின்றது. அதனால் தான் யாது தடை வந்தாலும் அவைகளால் எளிதில் அவற்றில் இருந்து தப்பித்து கொள்ள முடிகின்றது.

2.  எறும்பின் இயல்பு என்ன என்றால் தனக்கு ஆபத்து ஏற்படும் போது நிலத்திலேயே இருந்து தன் நிலையை நிலத்திலேயே மாற்றிக்கொள்ள முடியும். மேலும் தன் தேவைகளுக்கு அது நிலத்தையே நாடிச்செல்ல வேண்டிய சூழல். இது அதற்கு இயற்கையிலே கொடுக்கப்பட்டது. இதனால் தான் தடை ஏற்படும்போது அவற்றால் தங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியாது, முடிவில் தடைபட்டு போகின்றன. மேலும் மீண்டும் தன் தேவைக்கு மீண்டும், மீண்டும் முயற்சி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள படுகின்றன. ஆதலால் அவை மிகுந்த இம்சைக்கு ஆளாக நேரிட்டே தங்கள் தேவையை அடைய வேண்டியுள்ளது.

இந்த விளக்கம் உங்களுக்கு கொடுக்கபட்டதன் நோக்கம் தவத்திற்கும், செய்தவத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குவதற்கு. இதில் பறவை வழி என்பது செய்தவத்தையும், எறும்பின் வழி தவத்தையும் குறிப்பிக்கும். இதில் இருந்து செய்தவத்தின் பலன் யாது என்று நாம் அறியமுடியும்.

1.  என்றும் தடை படாத வழி,

2.  தடைப்பட்டாலும் உடன் அதில் இருந்து விடுபட வழி

3.  மிகவும் எளிதான வழி

4.  யாவராலும் எளிதில் செய்ய முடியகூடிய வழி

சரி, செய்தவம் என்று சொல்கின்றீர்கள் அப்படி என்றால் என்ன.

இதோ நம்ம வல்லவனிடம் கேட்டால் போயிற்று. அவர் என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.

சாதகர்கள் (தவசாலிகள்):-     மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவா தீதா தீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரண லயமாகச் சமாதிசெய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்கா நின்ற விரதமிருந்தும், சாதரண யோகபாகத்தில் மூச்சடக்கியும், செய்பவர்கள்

சாத்தியர்கள் (பொறுமைசாலிகள்) :-    

கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆரூடராக நிற்பதால் – சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்த தேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.

பார்த்தீர்களா செய்தவத்தின் கோட்பாடுகளை இதில் நாம் நம்மை அறியாமலே இரண்டு விஷயங்களை கேட்பதையும், சிந்திப்பதையும் இயற்கையிலே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் மற்ற இரண்டில் நாம் தெளிதல் (அனுபவம்) என்பதையும் உலகியல் விசயங்களில் மட்டும் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அதிலும் முன்பு பெற்ற அனுபவத்தை பின் வரும் நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் உபயோகப்படுத்துவது இல்லை. காரணம் மறதி. நிஷ்டைகூடல் என்பது பெற்ற அனுபவத்தில் லயிப்பது, அதாவது அழுந்துவது. செய்தவம் என்பது இந்த நான்கையும் ஒருங்கே செய்து இதிலும் அழுந்தாமல் தெளிந்த அறிவாய் இருப்பது. அவர்களது அறிவே சுத்த அறிவு. அவர்களே சுத்தர்கள்.

இயற்கையிலே நாம் ஏற்கனவே அறியாமல் உலகியலில் செய்து கொண்டிருக்கின்ற ஒன்றையே நாம் அறிந்து அருளியலில் செய்வதே செய்தவம். இதனால் நான் பின்னுக்கு தள்ளப்பட்டு அருள் முன்னிலை படுத்தபடுவதால் அருட்குருவாய் திருவருள் சொல்லிக்கொடுக்க நாம் அனைத்தையும் பிழையின்றி கற்றுக் கொள்ளமுடியும்.

செய்தவத்தின் வீரியம் எப்படிப்பட்டது என்பதை பார்த்தீர்களா. செய்தவத்துக்கும் நம் சாகாக்கல்விக்கும் என்ன தொடர்பு. சத்விசாரம் என்பது சாகாக்கல்விக்கு வழி என்று பார்த்தோம் அல்லவா. அந்த சத்விசாரமே செய்தவம். இதோ நம் வல்லவனின் அனுபவக்குறிப்பு…

கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்

செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்.    

உய்தர வமுத முதவியென் னுளத்தே

செய்தவம் பலித்த திருவளர் மதியே.                 
துறையிது வழியிது துணிவிது நீசெயும்

முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே

இந்த அனுபவத்தில் வல்லவன் பெற்றது என்னவென்று நமக்கு உணர்த்துகின்றார். அது என்னவென்றால்

கடுமையான தவம் செய்பவர்கள் கூட கனவிலும் காண்பதற்கு அரியதாய செய்தவ பயனை திருவருள் உதவியால் பெற்றேன் என்றும், இறப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஏற்ற தரத்தில் அமுதம் கொடுத்து என் உள்ளத்தில் செய்தவத்தை நடத்தி கடவுள் வளரும் அறிவையும் கொடுதாயே என்றும், இதுவே உன் துறை, உன் வழி, உன் செயல், உன் செய்முறை என்று எனக்கு மொழிந்த துணையே என்று கூறுகின்றார்.

இந்த பாடத்தில் நாம் நமது தரத்தையும் என்ற வார்த்தையை அடிக்கடி பார்த்திருக்கின்றோம். அப்படி என்றால் என்ன. நாம் தான் எப்போதும் ISO 9001 – 2015 ஆயிற்றே என்று யோசிக்கின்றீர்களா. நமது தரத்தை நாம் சுயபரிசோதணை செய்துக்கொண்டால் தான் உண்மை விளங்கும். அனைத்தும் அறிந்த நாம் வாழ்நாளில் ஒரு முறையேனும் நம்மைப்பற்றிய உண்மையான சுயபரிசோதணை செய்துகொண்டது உண்டா. ஆனால், பிறரை பற்றி ஒரு நாளில் பலமுறை பரிசோதணை செய்துவிடுகிறோம். இதோ நமது வல்லவனின் அனுபவக்குறிப்பு என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்…

1.  அபக்குவி         - ஞானஅறிவு விளங்காதவர்கள்

2.  பக்குவாபக்குவி  - ஞானஅறிவு விளங்கியும் விளங்காதவர்கள்

3.  பக்குவி           - ஞானஅறிவு விளங்கியவர்கள்.

இவை ஒவ்வொன்றிலும் ஆறு பிரிவுகள் உள்ளன. 

மொத்தம் 18 நிலைகள்
        
அதிமந்தம்
       
மந்தம்
        
மந்ததரம்
       
 தீவிரம்
       
 தீவிரதரம்
        
அதிதீவிரதரம்

இந்த நிலைகளுக்கு விளக்கங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்ற விவரம் மட்டுமே நாம் அறியாதது. இதற்காகதான் வல்லவன் தன் கடைசி வார்த்தையில் அழகாக சொல்லியிருக்கின்றார். அது என்ன என்பதையும் பார்ப்போம்.
  
இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

எதற்காக இந்த சுயபரிசோதணை என்று கேட்க தோண்றுகின்றதா. மீண்டும் சன்மார்க்கம் என்றால் என்ன, சன்மார்க்கி யார் என்பதை நினைவு படுத்திக்கொண்டால் அனைத்தும் நமக்கு புரிந்துவிடும். அது இதோ…

சன்மார்க்கம் என்பதை நான், நீ என்கின்றார்.

இதோ அவர் அனுபவ வார்த்தைகள்

“தங்களைப் பார்க்க வேண்டுமானால் என்னைப் பாருங்கள்; என்னைப் பார்க்கவேண்டுமானால் தங்களைப் பாருங்கள். தங்களைப் பார்த்தால், என்னைப் பார்ப்பீர்கள்: என்னைப் பார்த்தால் தங்களைப் பார்ப்பீர்கள்.”

சுத்த சன்மார்க்கி என்பவன் யார்? 

இதோ வல்லவனின் அனுபவ குறிப்பு…

1.சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும்.

2. விருப்பு, வெறுப்பு முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும்,

3. கொலை (கோபம்), புலை (பொய்) தவிர்த்தவர்களும். அதாவது செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.

சாகாதவனே சன்மார்க்கி. சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே யன்றி வேறில்லை.

இப்போது புரிகின்றதா சன்மார்க்கியாக நமக்கு எந்த தரம் வேண்டும் என்று. சன்மார்க்கத்தின் முதல் படியாகிய நான் தெரிந்தால் தான், அதற்கு தேவையான ஞான அறிவு விளங்கினால் மட்டுமே நாம் சன்மார்க்கியாக முடியும். சரி இந்த ஞானஅறிவு எப்படி விளங்கும் அதற்குதான் முதல் படியாகிய செய்தவம் என்ற சத்விசாரத்தை நமக்கு வல்லவன் வகுத்து கொடுத்திருக்கின்றார்.

இதோ உங்கள் தெளிவிற்கு வல்லவனின் 

ஒற்றை ஒரே பாடல்

மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஒர் புதுமை அன்றோ
செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண்ணீ ர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.

மற்றுமொரு தெளிவிற்கு இதோ இந்த பாடலை படியுங்கள்….

Ø  உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
         ஒளிபெற விளங்குசுடரே

Ø  உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
         யோகநிலை அருளுமலையே

Ø  உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை
         உணர்என உணர்த்துநிறைவே

Ø  உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற
         ஒருமொழியை உதவுநிதியே

Ø  ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்
         ஒன்றல்அற நின்றநிலையே

Ø  உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
         உள்உணர உள்ளுமதியே

Ø  உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்
         உற்றறிதி என்றபொருளே

Ø  உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
         ஓதுமெய்ப் போதநெறியே

Ø  அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
         தகந்தெளிய அருள்செய்தெருளே

Ø  ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
         அதீதஅறி வென்றஒன்றே

Ø  அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
         அதீதநிலை என்றநன்றே

Ø  ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
         அறிதிஎன அருளுமுதலே

Ø  அன்பென்ப தெசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
         அறிவித்த சுத்தஅறிவே

Ø  அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
         அடைந்திடா தென்றஇறையே

Ø  ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
         அறிந்தடைதி என்றநலமே

Ø  அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை
         அவாவிஇடல் என்றமணியே

Ø  இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்
         எங்கணும் எனச்சொல்பதியே

Ø  இரவுபகல் அற்றஇடம்அதுசகல கேவலம்
         இரண்டின்நடு என்றபரமே

Ø  இச்சைமன மாயயே கண்டன எலாம்அவை
         இருந்துகாண் என்ற தவமே

Ø  யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
இருத்திஎன உரைசெய்அரைசே

Ø  என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்
            இலங்குமணி யேஎன்உயிரே

Ø  என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
            இருந்தசிவ மேஎன் அன்பே

Ø  எந்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
            எடுத்தா யேஎன்உறவே

Ø  என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
            என்அருட் குருவடிவமே

Ø  கலகமனம் உடையஎன் பிழைபொருத் தாட்கொண்ட
            கருணையாங் கடல்அமுதமே

Ø  காழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்
            கருதுசம யாதிபர்களும்

Ø  கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
            களித்துமெய்ப் போதம்உண்டு

Ø  கனிமதுரம் ஒழுகுசெம் பதிகச்செ ழும்சொன்மழை
            கண்ணுதல் பவளமலையில்

Ø  கண்டுபொழி அருள்முகில் சம்பந்த வள்ளலாங்
            கடவுளே ஒத்தூரினில்

Ø  கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக்
            கதிஉல கறிந்துய்யவே

Ø  கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்
            காட்சியே சிவஞானியாம்

Ø  கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்
            காப்பதுன் கடன்என்றுமே.

இந்த பாடலுக்கு விளக்கம் உங்களுக்கு அனுபவத்தில் புரிந்தால் மற்றையவை யாவும் உங்களுக்கு தெள்ளத்தெளிவாக விளங்கும். மற்றொரு விளக்கம் யாதொன்றும் உங்களுக்கு தேவையில்லை.

இங்கே தான் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். செய்தவத்தின் பயனாய் நாம் சிற்சபையையும், பொற்சபையையும் கடந்து ஞானசபையின் வாசல் வரை செல்ல முடியும். அதன் பிறகு ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் கோட்டயின் கதவினை திறந்து உள்ளே செல்ல வேண்டும். இதற்கான சாவியை நாம் பெற்றுக்கொண்டால் தான் நாம் உள்ளே செல்ல முடியும். அது என்ன சாவி அதன் மகத்துவம்தான் என்ன பொறுத்திருங்கள்….

திருச்சிற்றம்பலம்.

மீண்டும் பூக்கும்……….

No comments:

Post a Comment