Friday, January 30, 2015

ஜீவகாருண்யம்



பாடம் – 3


ஜீவகாருண்யம்


முதல் பாடத்தில் நாம் பார்த்தது சாகாக்கல்வியின் வழியை. பரோபகாரம், சத்விசாரம் இவை இரண்டு மட்டுமே சாகாக்கல்வியை அடைவதற்கு ஏது என்று அறிந்தோம். இந்த பாடத்தில் நாம் பார்க்கப்போவது பரோபகாரம் என்ற ஜீவகாருண்யத்தை.

அது என்ன சாவி அதன் மகத்துவம் தான் என்ன என்பதை பார்க்கபோகும் முன் நம் வல்லவனின் ஒரு அனுபவக்குறிப்பை பார்த்துவிடுவோம்.


1.  விரதிகளும்,


2.  பக்தர்களும்,


3.  இருடிகளும்,


4.  யோகிகளும்,


5.  சித்தர்களும்,


6.  ஞானிகளும்….


ஜீவகாருண்யம் எங்கின்ற திறவுகோலைச் சம்பாதித்து கொள்ளாதவர்களானால் மோட்சம் என்ற வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்தில் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று உண்மையாக அறியவேண்டும்.


இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே அந்த சாவி என்பது என்ன என்று. ஆம் அதுவே ஜீவகாருண்யம். செய்தவம் நம்மை ஞானசபையின் வாசல் வரை கொண்டு செல்லும் என்று பார்த்தோமல்லவா. செய்தவத்தின் வாயிலாக நாம் சுத்தனாவோம் என்றும் பார்த்தோமல்லவா.


முன்னுரையின் மூலம்                   சமரசத்தையும்

செய்தவத்தின் மூலம்                      சுத்தத்தையும்

ஜீவகாருண்யத்தின் மூலம்           சத்தியத்தையும்

முதல் பாடத்தின் மூலம்                 சன்மார்க்கத்தையும்


தெரிந்துகொண்ட நாம் இங்கே ஜீவகாருண்யத்தின் மூலம் சத்தியத்தை தெரிந்துக்கொள்வோம். வாருங்கள்.

ஜீவகாருண்யம் என்றால் என்ன என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம் மீண்டும் அதை தெளிவாக பார்ப்போம்.

வல்லவனின் அனுபவகுறிப்பு என்ன சொல்கின்றது என்று முதலில் பார்த்துவிடுவோம்.


அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகது நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற்படியாயிருகிறது. ஆதலால் இதை பாதுகாத்தல் வேண்டும். (திருவருட்பா ஆறாவது திருமுறை திருநெறிக் குறிப்புகள் – பக்கம் 83 – கலைஞன் பதிப்பகம்)

Ø  நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையாலடைவதரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தாலல்லது வேறு வகையால் வராது. 

 ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு.

Ø மேலும், கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற, ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபம் என்று உண்மையாக அறிய வேண்டும்.

Ø கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக்கொண்டே அதை அடையக்கூடும் என்று அறிய வேண்டும்.

Ø ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லாது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாதென்று உறுதியாக அறிதல் வேண்டும்.

Ø வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், ஜீவகாருண்யத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும், வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமானம் வேண்டாமென்று அறிய வேண்டும்.


அட போப்பா நாங்களே அவர் சொன்ன ஜீவகாருண்யம் என்னன்னு தெரியாம தெளிவில்லாமல் அலைந்து கொண்டிருக்கின்றோம். நீ வேற அதையே திருப்பி சொல்கின்றாய். எதை சொன்னாலும் தெளிவாய் சொல்லு.

சரி நாம் மீண்டும் நம் வல்லவனிடம் கேட்டால் போயிற்று. அவர் என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.


இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.


என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும்,


"எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என,


"தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன்.


மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.


"கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான்.


என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.


அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.


என்ன தெய்வங்களா இப்பவாவது புரியுதா!!!! சரி இன்னும் சற்று தெளிவாய் பார்ப்போம். சரி நீங்கள் பாட்டுக்கு சுத்தம் என்கின்றீர்கள், ஜீவகாருண்யம் என்கின்றீர்கள், அருள் என்கின்றீர்கள், அன்பு என்கின்றீர்கள், தயவு என்கின்றீர்கள், ஒருமை என்கின்றீர்கள், 

இத்தனை சொன்னால் நாங்கள் எதை பிடிப்பது என்று புரியவில்லையே. இன்னும் சற்று தெளிவாக சொல்லுங்கள். நம்ம வல்லவனிடமே கேட்டால் போயிற்று அவர் என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம் வாருங்கள்

தயவென்பது சமரசம், சமரசம் என்பது சுத்தம், சுத்தம் என்பது நிர்மலம், நிர்மலம் என்பது வெள்ளை, வெள்ளை என்பது ஞானம், ஞானம் என்பது அருள், அருள் என்பது காருண்யம், காருண்யமென்பது தயவு…

இதில் இருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இவை அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கும். அனைத்தும் ஒன்றே என்ற தெளிவே நமக்கு தேவையானது. இது வந்தால் தான் நமக்கு ஒருமை வரும். ஒருமை வந்தால் தான் அனைத்தும் வரும்.

சரி நீங்கள் சொல்வது ஏதோ சிறிது புரிந்தது போல் தெரிகிறது அதே சமயம் புரியாதது போலும் இருக்கின்றது. இன்னும் சற்று தெளிவாக விளக்கமுடியுமா. வாருங்கள் பார்க்கலாம்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நாம் இரண்டு விதமாய் பகுக்க முடியும். அவை

1.  உயிர் உள்ளது

2.  உயிர் அற்றது.

அனைத்தும் இந்த பகுப்பிலே வந்துவிடும். ஆனால் சன்மார்க்கியான நமக்கு பகுப்புகள் ஒன்றும் கிடையாது. ஆதலால் அனைத்தையும் பொதுவாக உயிர் பொருளாய் பார்க்க தொடங்கினால் நமக்கு தேவையான ஒருமை என்ற பொதுநோக்கம் வந்துவிடும். விளக்கத்திற்கு நம் வல்லவனிடம் கேட்டால் போயிற்று.


உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக

        செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே


உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே

        உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே


இயல்ரு ளொளியோ ரேகதே சத்தினாம்

        உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே


உயிர் (எ) பொதுநோக்கம் (எ) ஒருமை வந்தால் தான் நம்மால் ஒரு பொருளை முழுமையாக காணமுடியும். அப்படி ஒரு பொருளை கண்டால் தான் அதன் தேவை என்ன என்று நம்மால் அறியமுடியும். அப்படி ஒரு பொருளை நாம் காணும் போது நம்முள் ஒன்றும் (நான் = ஆணவம்) இல்லாமல் அந்த பொருளின் தேவையறிந்து அதை நிவர்த்திக்க தோன்றும் நிலையே தயவு தோன்றுவதற்கு உரிமையும் ஆகும். இது தோன்றினால் மட்டுமே நம்மால் திருப்தியின்பத்தை உண்டு பண்ணமுடியும். சரி வாருங்கள் வல்லவனின் விளக்கத்தை பார்ப்போம்..


உருவிளங்க வுயிர் விளங்க வுணர்ச்சியது விளங்க

      உலகமெலாம் விளங்க அருளுதவுபெருந் தாயாம்

மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்கு

      வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே


பார்த்தீர்களா பொதுவிளங்கினால் எது எது விளங்குகின்றது என்று, இவை விளங்கினால் வளர்வது எது என்று புரிகின்றதா.


இப்படி அந்த உயிரின் தேவை அறிந்து அந்த உயிருக்கு திருப்தி இன்பத்தை உண்டு பண்ணுவதே ஜீவகாருண்யத்தின் லட்சியம் என்று அறியவேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்பதே நம் வல்லவனின் கோட்பாடு. என்பதை நாம் புரிந்தால் போதும்.

இப்படி நாம் செய்வதற்கு தடையாக இருப்பது எது என்று கண்டு கொண்டீர்களா. அதுவே ஆணவம். இதை நாமாக போக்கக்கூடாது இது தோன்றும் போது ஞானஅறிவு விளங்கினால் அவராக போய்விடுவார். விளங்கவில்லை என்றால் ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருக்கும் போகப்போக ஞானஅறிவு விளங்கி தோன்றும்.

இந்த கடினத்தை போக்குவதற்குதான் நம் வல்லவன் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உண்மை நெறிகளை வகுத்து கொடுத்து சென்றிருக்கினறார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்….


ஜீவகாருண்ய ஒழுக்கம் (எ) உண்மை நெறி


1.  இந்திரிய ஒழுக்கம்   - ஏமசித்தி


2.  கரண ஒழுக்கம்       - சாகக்கல்வி


3.  ஜீவ ஒழுக்கம்         - தத்துவ நிக்கிரகஞ் செய்தல்


4.  ஆன்ம ஒழுக்கம்      - கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்


இவற்றில் முதல் இரண்டை மட்டுமே நம்மால் கடைபிடிக்க முயற்சி செய்யமுடியும். மற்ற இரண்டும் திருவருட்பூரணத்தால் மட்டுமே பெறமுடியும். முதல் இரண்டின் முயற்சி வெற்றி ஆனால் மற்ற இரண்டும் விளக்கப்படும். சரி வாருங்கள் உண்மை நெறியை பார்ப்போம்.


1.  இந்திரிய ஒழுக்கம்:-


சரி இந்திரியங்கள் என்றால் என்ன என்று தெரிந்தால் தான் நாம் அதன் ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியும். அப்போதுதான் முயற்சியில் வெற்றி பெற முடியும்.


1.  கண்    -    பார்த்தல்


2.  காது   -    கேட்டல்


3.  மூக்கு  -    வாசணை அறிதல்


4.  நாக்கு  -    சுவைத்தல்


5.  தோல்  -    உணருதல்


இவை ஒவ்வொன்றும் ஐந்தொழில் புரிவதற்கு காரணமாக இருப்பது கரணம் என்று சொல்லக்கூடிய


2. கரண ஒழுக்கம்


6. மனம்    -    பற்றுதல்


7. புத்தி     -    நிச்சயித்தல்


8. சித்தம்    -    விசாரித்தல்


மேலே சொன்ன இந்திரியங்களாகிய கருவிகள் தான் (நனா = பகலில்) செய்யும் செயலை மனமாகிய கருவி பற்ற (பற்று எங்கே ஆரம்பிக்கின்றது என்று பாருங்கள்) புத்தியாகிய கருவி அதனை நிச்சயிக்க சித்தமாகிய கருவி அதனை குறித்து விசாரித்து அழுந்த அதன் பிறகு மீளுவதற்குள் அடுத்த செயல் ஆரம்பித்துவிடும். இப்படியே தொடரும்….. கருவிகள் இயக்கபடாத இரவினிலும் (கனா) கரணமாகிய மூன்று கருவிகள் இயங்கும். (சுழுப்தி) ஆழ்சித்தத்தில் இயங்ககூடியது.

இப்படிபட்ட இந்த எட்டு கருவிகள் தான் எட்டு எழுத்துக்கள் எட்டு மந்திரங்கள் இந்த எட்டை சுற்றிதான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எட்டை நாம் உண்மை அறிவைக் (அருளை) கொண்டு விசாரிக்க (செய்தவம்) தொடங்கினால் மட்டுமே இதற்கு ஏதுவான ஒருமையும், அதற்கு ஏதுவான தயவு (ஜீவகாருண்யம்) விளங்கும்.
அந்த எட்டெழுத்து மந்திரம் தான்

அருட்பெருஞ்ஜோதி

இவை அனைத்திற்கும் பதில் தான் என்ன என்றால் நம் வல்லவனின் ஒற்றை வார்த்தை வெற்றி மந்திரம்

சமரசம்

மட்டும் தான். இதை பிடித்தால் ஒத்த கருத்து வரும். இது வந்தால் எல்லாம் வரும் நீங்கள் விரும்பிய வண்ணம்.

அதற்காகதான் தான் கண்ட சங்கத்திற்கு சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம் என்று பெயர் சூட்ட பட்டிருக்கின்றார்.

இப்படி பல விதமாக நமக்கு தான் கண்ட அனுபவங்களை விளக்கி சொன்ன வல்லவன். தான் எந்த நிலையினை பெற்றார் என்பதை நினைவு கூர்ந்தால் மட்டுமே நாம் உண்மை தயவு என்ற ஜீவகாருண்யத்தை தெரிந்துக்கொள்ள முடியும். இதோ அவர் பெற்ற நிலையினை நாமும் அறிவோம்.

உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
        விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!

சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக
        உத்தம னாகுக வோங்குக வென்றனை!

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
        அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

இப்படி சொல்லிய வல்லவன் கடைசியாக என்ன சொல்கின்றார் என்றும் பார்ப்போம். இதோ…

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

பின்குறிப்பு:

பசியை மட்டும் நம் வல்லவன் மிகவும் குறிப்பித்து அதனை யார் தடுத்தாலும் நீக்குதல் வேண்டும் என்று சமரசத்தை மீற சொல்கின்றார் ஏன் என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

(உணவு மட்டுமே இந்த தேகமாகிய ஜீவான்மாவிற்கு, ஆன்மாவாகிய நாம் கொடுக்கும் குடிக்கூலி (Rent). வேறெந்த கூலியை கொடுத்தாலும் இந்த ஜீவான்மா திருப்தி அடையாது, ஏற்றுக்கொள்ளாது, உயிர் வாழமுடியாது. ஆதலால் ஊழ் வினையால் உணவு கிடைக்காத ஆன்மாக்களுக்கு உயிர் ஆகாரத்தை கொடுப்பதே மேலான இன்பம் என்பதால் தான் தன் வெற்றி மந்திரத்தையும் மீறசொல்கின்றார்.)

இதற்கு பசி என்றால் என்ன என்று நாம் அறிந்தால் தான் நம்மால் சிந்திக்க முடியும் அதற்காக பட்டினி கிடப்பது என்று அர்த்தம் அல்ல. இதோ பசியை குறித்த நமது வல்லவனின் அனுபவ விளக்கம்.

பசி என்பது கடவுளால் கொடுக்கபட்ட ஒர் உபகாரக்கருவி. இது இருந்தால் தான் ஜீவகாருண்யம் விளங்கும்.


பசியினால் துன்பப்படுகின்றவர்கள் ஆகாரத்தை கண்ட காலத்தில் (இங்கே இந்த வார்த்தையை நன்றாக ஊன்றி படிக்கவும்) அடைகின்ற சந்தோஷமும் தாய், பிதா, பெண்டு, பிள்ளை, காணி, பூமி, பொன், மணி முதலானவை கண்ட காலத்திலும் அடையார்களாயின், ஆகாரம் உண்ட காலத்தில் (இங்கே இந்த வார்த்தையையும் நன்றாக ஊன்றி படிக்கவும்) உண்டாகும் சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்!!!

ஆகலால், இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும், கடவுளருளின் ஏகதேச சொரூப ரூப சுபாவங்களாகவே அறியவேண்டும்.  
(ஜீவகாருண்ய ஒழுக்கம் – 1, பக்கம் 22, ஆறாம் திருமுறை – கலைஞன் பதிப்பகம்)

அன்னவிரயம் என்பது நம் பாவங்களை நிவர்த்தி செய்யும் ஒரு பரிகாரம். அதற்காக தான் ஒரு ஜீவான்மா இறந்த இடத்தில் மட்டுமே இயன்றமட்டில் அன்னவிரயம் செய்ய சொல்கின்றார் நம் வல்லவன்.

இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது சுத்த சன்மார்க்கிகள் அன்னத்தை இறைவனின் சொரூபமாக (இறைவனாக) காண்பார்கள். இப்படி காணாதவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து சுத்த சன்மார்க்கிகளாக வேண்டும் என்பதே இந்த ஏழை ஆன்மாவின் விண்ணப்பம்

காலந்தாழ்த்தாது, எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்த குணம் வந்தவன் எவனோ அவன் தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆண்டவனுமாவான்.

திருச்சிற்றம்பலம்

மீண்டும் பூக்கும்…….

No comments:

Post a Comment