Sunday, May 3, 2015

தயவு



4.        தயவு

இது வரை நாம் பார்த்ததை விட மிகவும் முக்கியமான ஒன்றை இறைவனின் சொருபத்தை, வண்ணத்தை, இயல்பை, யாவரும் அறிய முடியாத இறைவனை ஒப்புயர்வில்லாத தலைவனை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகின்றோம்.

அனைத்துமாகிய, அனைத்துள்ளும் விளங்குகின்றவனாய் அனைத்தையும் இயக்கின்றவனாய், ஐந்தொழிலையும் புரிபவனாகிய இறைவன் யார்? என்ற கேள்வி நம்முள் எப்போதும் சுழன்று கொண்டிருக்கும் ஒன்று. இதற்கான விளக்கத்தை நம் வல்லவன் எவ்வளவு அழகாக நமக்கு வெளிப்படுத்துகின்றார் என்பதை நாம் காண்போம்.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை 

தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,


எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்:

நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி 

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.

ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அதுவே ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம் (இறைவன்).

மீண்டும் அதே மந்திரமா என்று கேட்பது புரிகின்றது. தனிப்பெருங் கருணை

1.  தனி

2.  பெரும்

3.  கருணை

இந்த மந்திரத்தை சற்றே பிரித்துப் பார்த்தால் தான் நமக்கு நம் வல்லவன் எவ்வாறு உண்மையை இறைவனின் சொருபத்தை தனது உண்மையறிவாகிய அனுபவத்தில் ஆனந்த இன்பத்தை கண்டு நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடையவேண்டும் என்று குறிப்பிக்கின்றார் என்பது புரியும்.

சரி வாருங்கள் சற்றே விளக்கமாக பார்ப்போம்…

கருணை

என்ற வார்த்தையை நாம் கேட்டிருப்போம் இதைத்தான் நாம் உலகியலில் அன்பு என்றும் ஜீவகாருண்யம் என்றும் அருள் என்றும் புரிந்திருக்கின்றோம். இந்த கருணையில்லை என்றால் எந்த அண்டத்திலும் எதுவும் நடைபெறாது என்பது நிதர்சனம். 

உதாரணத்திற்கு உங்கள் மனைவியிடம் காபி கேட்கின்றீர்கள் அவர் கருணை இருந்தால் தான் உங்களுக்கு காபி கிடைக்கும். அவரிடம் கருணை இல்லையென்றால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். இதைப்போல்தான் உலகியலில் நடைபெறும் அனைத்து  நிகழ்வுகளுக்கும் அடிப்படை இந்த கருணை மட்டுமே. மனித பிறவி எடுத்த, எடுத்திருக்கின்ற, எடுக்கப்போகின்ற எல்லா உயிர்களுக்கும் இதுவே பொது. அவர் அவர் வினைக்கு ஏற்ப மாறுபடும்.  

பெரும்

கருணை என்ற வார்த்தையே மிகவும் வலுவானது என்று பார்த்தோம் அந்த கருணையுடன் பெரும் என்ற வார்த்தையின் அர்த்ததை சேர்த்து பார்க்கும் போது அதன் வலிமையை எவ்வாறு உணருகின்றீர்கள் என்று பாருங்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால் உலக உயிர்கள் மட்டுமின்றி அண்டான்டங்களையும் தன் பெரும் கருணையினால் கட்டுப்படுத்தி, இயக்கி கொண்டிருப்பது என்பது புரியும்.

நானே அனைத்தும் அறிந்தவன் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களை (இறைவன் வாழும் வீடு) எவ்வாறு இறைவன் தன்னில் இருந்து தனிமை படுத்துகின்றான் என்று பாருங்கள். உண்மை உங்களுக்கு புரியும்.

தனி

பெரும் கருணையிலே நம்மை எல்லாம் உதறிவிட்ட இறைவன் மேலும் ஒரு படி போய் தனி என்ற வார்த்தையை சேர்த்ததால் என்ன என்பது புரிகின்றதா. பெரும் கருணை என்றால் ஓன்றே அதற்கு வேறு ஒரு ஒப்பில்லாதது என்றும் ஒன்றே ஒன்று தான் அண்டாடங்களையும் அதனுள்ளிருப்பவற்றையும் தன் தனி பெரும் கருணை வல்லபத்தால் ஐந்தொழில்களாலும் நடத்திக்கொண்டிருப்பதும் புரியும்.

இப்போது புரிகின்றதா  இப்படி எல்லாவற்றையும் தன் தனிப்பெருங்கருணையினால் இயக்கிக் கொண்டிருக்கின்ற இறைவனின் சொருபத்தை எப்படி சொல்வீர்கள், அவன் வடிவம் என்ன என்றுதான் கூறமுடியுமா. அந்த வடிவம் தான்

தயவு

எத்தனை அற்புதமாக இறைவனின் சொருபத்தை தன் அனுபவத்தின்கண் பெற்றார் என்பதை அவர் வார்த்தையை மீண்டும் படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளமுடியும். இதோ…

எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,

எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

சரி இந்த இறைவனின் தயவுக்கு ஒரு சிறு சாட்சியை பார்ப்போமா. எல்லா ஞானிகளும் சொல்வது என்னவென்றால் மனிதர்களாக பிறந்தவர்கள் யார் வேண்டுமானால் இறை நிலையை அடைய முடியும் என்பதைத்தான். அது எப்படி மனிதர்கள் மட்டும் பெறமுடியும் என்று என்னும் போது தயவு என்ற அறிவு என்பது மனிதர்களிடம் மட்டுமே மற்ற உயிர்களைகாட்டிலும் சற்று மிகுந்திருக்கின்றது. இந்த வார்த்தையை சற்று ஊன்றி பார்க்கவும். அப்போதுதான் இறைவனின் தனிபெருங்கருணையை தெரிந்து கொள்ளமுடியும். இதன் தாத்பரியம்

தன்னிடமுள்ள மொத்த கருணையையும் உலகத்தில் படைத்த, படைக்கப்பட்ட,  படைக்கப்படப்போகின்ற அத்தனை உயிர்களிலும் தனக்கென்று மீதம் ஏதும் வைத்துக்கொள்ளாமல் அத்தனை தயவையும் எறும்பு முதல் யானை வரை உள்ள அத்தனை உயிர்களுக்கும் கொடுத்து அந்த உயிர்கள் அனைத்தும் இன்புற்று தன் விருப்பப்படி வாழ தற்சுதந்திரத்தையும் கொடுத்து அனுபவம் பெற்று மேலேறி வர வழிவகையும் செய்து கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கின்றவர், தன் சாயலாக இறைவன் மனிதனை படைத்தார் என்பது தன் தயவை மனிதர் அறியும்படி செய்திருப்பது தான். மற்ற உயிர்களுக்கு தயவு என்பது என்னவென்று புரியாது ஆனால் அவைகளுக்கு நன்றி என்பது என்னவென்று நன்றாகவே புரியும். மனிதர்களுக்கு அது புரியாத மொழி. உங்கள் அறிவை சற்று சிந்திக்கத் தூண்டினால் உங்களுக்கே அது புரியும்.

இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது இவை அனைத்தையும் தான் தான் செய்கின்றோம் என்பதை அணு அளவேனும் பிறர் அறியாமல் செய்துக்கொண்டிருப்பது அதுவும் சலிப்பில்லாமல். (நம் தயவு எல்லைக்குள் உட்பட்டது ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை, அப்புறம் போடா - உண்மைதானே)

இதோ நமது வல்லவனின் அனுபவக்குறிப்பு

எங்கே கருணை யியற்கையி னுள்ளன

அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

அருளென்பது = கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம்

ஜீவகாருண்யமென்பது = மனிதர்கள் தயவு, மனிதர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்

இதனால் தயவைக்கொண்டு தயவைப் பெறுதலும். விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தை பெறுதலும் கூடும்,

வெறொன்றினால் பெறக்கூடாமை அனுபவம் 

ஆகலினால் தயவைக் கொண்டே தயவை பெறுதல் கூடும்,

வெறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். 

இதற்கு வேறு பிரமானம் வேண்டாமென்று அறிய வேண்டும்.

இங்கே தான் நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும் நம் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோமோ அவ்வாறே நாம் வளர்க்கின்றோம் அவர் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப. இயற்கையிலேயே நம் குணம் அந்த குழந்தையிடம் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிலையை மற்றிக்கொள்ளும் வல்லபமும் அதற்கு இயற்கையிலே கொடுக்கப்பட்டிருக்கின்றது தன் அறிவுக்கு எது சரி என்று படுகின்றதோ அதன் படியே அந்த குழந்தை செயல்படும். இதை நாம் மாற்றமுடியுமா.

இதை போல்தான் இறைவன் தன் குணமாகிய தயவை அப்படியே தன் குழந்தைகளாகிய மனிதர்களிடம் கொடுத்திருக்கின்றார். கொடுத்த அந்த குணத்தை தன் அறிவால் (திரையால்) மறைத்தும் விடுகின்றார். அனுபவம் என்னும் அறிவால் மட்டுமே அதை திறக்கவும் வைக்கின்றார். 

ஆகவே இயற்கையிலே தயவே வடிவான (இறைவனின் சொருபமான) நாம் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த தயவை மறந்து செயற்கையிலே உழன்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்துக் கொண்டால் போதும். அதன் பிறகு நம்முள் இருக்கும் தயவை நாம் அறிய தொடங்கினால் அதன் எல்லையில் நாம் இறைவனாவோம் என்பது நிதர்சனம். 

தயவு என்பது 

1.     !!! அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாக்காது நடத்தலே தயவு !!!. பிறர் செய்யினும் பொருத்தல் வேண்டும் (தான் கெடாமல் ) !!! 

2.     !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

என்பதே நம் வல்லவனின் கோட்பாடு. என்பதை நாம் புரிந்தால் போதும்.


வல்லவனின் இந்த தயவின் விளக்கத்தை தயவால் (என்னைப்போல்) அறிந்தவர்கள் சத்தியமாக அருட்பெருஞ்ஜோதியின் வசமாவார்கள். அல்லாதவர்கள் வீணிலே உழன்று மீண்டும் தயவால் இந்த அனுபவம் பெற்று அருட்பெருஞ்ஜோதியின் வசமாவார்கள் என்பது திண்ணம். அறுதியிட்டு இதை கூறுவதற்கு காரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற என் அண்ணன் சிதம்பரம் இராமலிங்கத்தின் உண்மை அனுபவத்தை நன்றாக பல முறை வாய்விட்டு படித்து பாருங்கள் அப்போதுதான் தயவு என்றால் என்னவென்று விளங்கும்.

என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது  
யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. 


உங்களிடம் தயவு உள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள ஒரு சிறு அளவு கோலையும் அவர் வகுத்திருக்கின்றார். இது வைத்து நீங்கள் உங்கள் தயவை அறிந்து அதன் படி மேலேற முயற்சி செய்யுங்கள் அவசியமான தயவு இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அளவு கோல்


1.  அமைதி


2.  ஆனந்தம்


3.  சகிப்புத்தன்மை


4.  அன்பு


5.  நிராசை


6.  சாந்தம்


நீங்கள் எல்லோரும் நம்பமாட்டீர்கள் இதோ உங்களுக்கான விளக்கம்

குணங்கள் சிறந்தன குற்றங்க ளற்றன

மணங்கள் விளங்கின வாழுவுக ளோங்கின

பிணங்க ளெல்லாமுயிர் பெற்றேழுந் தோங்கின

இணங்க அருட்பெருஞ் ஜோதியா ரெய்தவே

பார்த்தீர்களா இது நம்ம வல்லவன் அடித்த final வெற்றி six-ஐ இதெல்லாம் நம்மகிட்ட இருக்கு ஆனா இல்ல என்ற வடிவேல் comedy நிலை தான் நம்முடயது.

சரி இத்தனை தெரிந்த நாம் சன்மார்க்கி என்று சொல்லிக்கொண்டு என்ன செய்துக் கொண்டிருக்கின்றோம் தயவை வெளியே தேடிக்கொண்டு தயவில்லாமல் எல்லா உயிர்களுக்கும் இம்சை செய்துக் கொண்டிருக்கின்றோமா இல்லையா என்ற கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் உண்மை விளங்கும். இப்படிப்பட்ட தயவின்மையை வைத்துக் கொண்டு சன்மார்க்கி என்று சொல்லிக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் திரிந்தாலும் தயவு விளங்காது. அப்படி ஆனால் தயவு விளங்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்குங்கள்.

தயவே வடிவான நாம் நம்மிடம் இருக்கும் தயவை மறைக்கும் எண்ணங்கள் தோன்றும் போது தயவின் நினைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டால் தன்னால் உங்களுள் இருக்கும் தயவு வெளிப்படத் தொடங்கும் மேலே சொன்ன ஆறு குணங்களும் உங்களுக்குள் தோன்றும். இந்த ஆறாம் நிலையான சாந்தம் (ஷண்முகமும் இதுவே, ஆறறிவும் இதுவே) உங்களுக்குள் நிலைத்தால் அதுவே துரிய நிலை இந்த நிலையே ஆன்மாவாகிய நம்முடைய நிலை அதன் பிறகே அருட்பெருஞ்சோதியின் நிலையாகிய சுத்த சிவம் கடந்த அதீத பெருநிலையை அடைவோம். ஆதலால் காலந்தாழ்தாது தயவான நம் இயல்பை நம் தயவை நம்முள் தேடத்தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

சரி எப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் அதற்கான விளக்கம்


ஈர்ப்பு விசை = ஈர்ப்பு சக்தி

இந்த சக்தியே அண்டாடங்களையும் அதனுள் இருக்கும் அனைத்தையும் தன் நிலையில் இயல்பு மாறாமல் காலம் நேர வண்ணம் இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிவியல் பூர்வமாக ஒரளவு நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த சக்தி இல்லை என்றால் அனைத்தும் ஒன்றிலே ஒடுங்கிவிடும்.

உலகியல் உதாரணம்

இரும்பாகிய காந்தம் இரும்பை மட்டுமே ஈர்க்கும் வேறு பொருளை ஈர்காது காரணம் இரும்பின் தண்மை வேறு மற்ற பொருட்களின் தண்மை வேறு. ஆதியிலே அனைத்தும் மூலக்கூறு ஒன்றானாலும் அதன் கலப்பு விகிதம் வேறுபடுவதால் ஈர்ப்பு சக்தி இருந்தும் செயல்படாமல் இருக்கின்றது. ஆகலால்

தயவே தயவை ஈர்க்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தயவுள்ளவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நம் வல்லவன் எவ்வாறு குறிப்பிக்கின்றார் என்பதை பாருங்கள்

தயவுள்ள சமுசாரிகளுக்கு உலகியல் லாபம்:

1.  கோடையில் வெயிலும் வருத்தாது,

2.  மண்ணும் சூடு செய்யாது,

3. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி,     பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா,

4. விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய  அசாத்திய பிணிகளுமுண்டாகா,

5. அந்தச் தயவுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள்,

6. அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள்,

7.  தயவுள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும்

8.  வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும்,

9.  உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்,

10. சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள்,

11. துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள்,

12. தயவுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

மேலும் மிக முக்கியமாக,

1.  ஆகாரம்,

2.  நித்திரை,

3.  மைதுனம்,

4.  பயம் 

என்பவைகளால் தடைபடார்கள்.

அவர்கள் தேகத்திற்கு

1.  சாயை,

2.  வியர்வை,

3.  அழுக்கு,

4.  நரை,

5.  திரை,

6.  மூப்பு,

7.  இறப்பு முதலிய குற்றங்கள் உண்டானவல்ல என்னும் சாக பெருநிலையும் அடைவார்கள்.


பார்த்தீர்களா தயவுள்ளவர்களுக்கு தயவு எப்படிப் பட்ட அரணாக விளங்குகின்றது என்று சத்தியமாக கொடுக்கப்பட்டிருக்கும் போது, இவற்றை மீறி  நமக்கு நடைப்பெற்றால் தயவு நமக்கு எவ்வளவு இருக்கின்றது என்பதை நாம் சற்று சிந்தித்து பார்த்து உண்மை நிலையினை உணர்ந்து, மேற்சொன்ன உண்மை தயவை

!!! அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாக்காது நடத்தலே தயவு !!!. பிறர் செய்யினும் பொறுத்தல் வேண்டும் (தான் கெடாமல் ) !!!

!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!


என்னும் உண்மையை எல்லோரும் உணர்ந்து மேற்சொன்ன எல்லா நலங்களும் பெற்று சாகாபெருநிலையினை எல்லோரும் அடைந்து ஜீவன் முக்தனாக வேண்டும் என்ற சிதம்பரம் இராமலிங்கம் என்ற ஜீவன் முக்தனின் சத்திய வார்த்தையில் சத்தியம் உள்ளது என்பதை ஏதும் அறியாத எனக்கு உண்மை அன்பால் உணர்த்தி, எதிலும் மயக்காமல் உண்மை அறிவால் சத்தியமான அவர் வழியை காண்பித்து என்னைப்போல் நீயும் அடைவாய் என்று  இந்த ஏழை ஆன்மாவின் உள்ளம் தெளிவித்து அனுபவமே முக்திக்கு படிகள் என்று அறிவித்து படிகளெல்லாம் விரைந்து கடந்துவா என்று உலகியல் பள்ளியில் என்னை வருவித்து, வாழ்வித்து அருளிக்கொண்டிருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் தயவுக்கு அளவில்லா தென்டனிட்டேன், இடுகின்றேன், இடுவேன். என் அண்ணனைப் போல் நீங்களும் அவர் வழியில்

உண்மை அன்பு

உண்மை இரக்கம்

உண்மை அறிவை பெற்று

உண்மை வாழ்வியலில்

உண்மை நிலையினை

அடைந்திட வேண்டும் என்பதே இந்த ஏழை ஆன்மாவின் விண்ணப்பம். எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் அவர் அவர் வண்ணத்திற்கு ஏற்ப விளக்கும் என்பதில் யாதொரு சந்தேகமில்லை. இது சத்தியம்.




உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி

!!! வான்பற்றி நின்ற மறைபொருள் 
தான்பற்றி நிற்க தலைபடும் தானே !!!

 (அதிசூட்சுமமும் இதில்தான் அடங்கியிருக்கின்றது 
தயவு விளங்கினால் தான் உண்மை விளங்கும்)

??? இந்தவாசல் ஏழைவாசல் எம்பிரான் இருக்கும் வாசல் 
 யாவர் காண வல்லரோ ???



திருச்சிற்றம்பலம்.